ராஜஸ்தான் கல்லூரிக் கதவுகளுக்கு ஆரஞ்சு நிறம் பூச உத்தரவு; எதிர்க்கட்சிகள் கண்டனம்

ராஜஸ்தான் கல்லூரிக் கதவுகளுக்கு ஆரஞ்சு நிறம் பூச உத்தரவு; எதிர்க்கட்சிகள் கண்டனம்

2 mins read
940d5a5a-0250-4caf-a7e8-8a8960af6e3d
கல்வித்துறையை காவியமாக்குகிறது பாஜக என்று மாநிலக் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா விமர்சித்துள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் நுழைவாயில்களில் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம் பூச அந்த மாநிலத்தின் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துச் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

இது அந்த மாநிலத்தில் பெரிய அரசியல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது, இது கல்வித் துறையையும் காவிமயப்படுத்தும் முயற்சி என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வன்மையாகக் கண்டித்து வருகின்றன.

அந்த உத்தரவின் முதற்கட்டமாக, 10 மண்டலங்களில் உள்ள 20 அரசு கல்லூரிகளின் வாசற்கதவுகளுக்கும் அடுத்த 7 நாள்களுக்குள் ஆரஞ்சு நிறம் பூச வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாநில அரசின் ‘காயகல்ப்’ திட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதற்கான காரணம் குறித்து ராஜஸ்தான் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் “கல்லூரிக்குள் முதன்முதலில் நுழையும்போதே மாணவ, மாணவியருக்கு நேர்மறையான உணர்வு ஏற்பட வேண்டும். அத்துடன் கல்விச் சூழலும் சூழ்நிலையும் இருக்க வேண்டும். உயர்கல்வி பற்றிய நல்ல செய்தியைச் சமுதாயத்திற்கு தெரிவிக்க வேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மாணவர் அணியின் மாநிலத் தலைவர் வினோத் ஜாகர் கூறுகையில், “மாநிலத்தில் ஆயிரக்கணக்கான விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

“கல்லூரிகளில் தேவையான வசதிகள் இல்லை. இந்த நிலையில், மாநில அரசு பொதுமக்களின் பணத்தை அரசியலுக்காகச் செலவிட்டு வருவது வருத்தத்திற்குரியது,” என்று வினோத் ஜாகர் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், ராஜஸ்தானின் கல்லூரிக் கல்வி ஆணையர் ஓம் பிரகாஷ் பைர்வா, உயர் கல்வித்துறையின் இந்த உத்தரவு வெறும் ‘குறிப்பு’தான், கல்லூரிகள் வேண்டுமானால் மற்ற வண்ணங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் எந்த ஓர் அரசியல் பின்னணியும் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஆனால், எதிர்க்கட்சியான காங்கிரஸ், முதல்வர் பஜன்லால் ஷர்மா தலைமையிலான மாநிலத்தின் பாஜக அரசாங்கம் அற்ப அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது, மாநிலக் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா இது ‘குறிப்பு’ என்று அரசாங்கம் கூறியுள்ளதை நிராகரித்தார்.

“தனது சித்தாந்தத்தின் முத்திரையை மாணவர்களிடம் பாஜக பதிக்க விரும்புகிறது. ஆரஞ்சு உட்பட இரண்டு வண்ணங்களில் சாயம் பூச வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடும் இந்தச் சுற்றறிக்கையில் குறிகாட்டியாக எதுவும் இல்லை,’‘ என்று கோவிந்த் சிங் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்