சென்னை: வடகிழக்குப் பருவமழைக்கு முன்பு சாலைகள் பராமரிப்பு, மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க, அனைத்துத் தரப்புப் பொறியாளர்களுக்கும் தமிழக மாநில நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது.
அண்மையில், சாலைப் பணி ஒப்பந்ததாரர்களுடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழை அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாகச் சாலைப் பணிகளை முடிக்க முடிவெடுக்கப்பட்டது.
“தற்போது மாநிலம் முழுவதும் 500 சாலைகளில் பணிகள் நடைபெறுகின்றன. இவற்றில், 200 சாலைத் திட்டப் பணிகள் 70 விழுக்காடு நிறைவடைந்துள்ளன. எஞ்சிய சாலைப் பணிகள் 50 விழுக்காடு முடிந்துள்ளன. அனைத்துப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். பணிகளைக் கண்காணிக்கத் தலைமைப் பொறியாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,’’ என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறினர்.
தமிழக நெடுஞ்சாலைத் துறையின்கீழ், மாவட்டங்களின் முக்கியச் சாலைகள், இதரச் சாலைகள் என 70,000 கிலோமீட்டர் தொலைவுக்குச் சாலைகள் உள்ளன. அவற்றில், மாவட்ட இதரச் சாலைகள் மட்டுமே 45,000 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளன.
அச்சாலைகளைப் பராமரிக்கவும் மேம்படுத்தவும் தமிழகம் முழுதும் 68 இடங்களில் அலுவலகங்கள் உள்ளன.
இவற்றின் வாயிலாக, ஒப்பந்ததாரர்கள் தெரிவுசெய்யப்பட்டு, சாலைப் பராமரிப்பு, மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.
