சென்னை: தமிழகத்தில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை செய்யப்படவில்லை. இருப்பினும் வாக்கு எண்ணும் நிலையங்களில் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் தினமும் இரண்டு முறை நேரில் சென்று கண்காணிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. இந்தத்தேர்தலில் 1,06,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் ‘விவிபாட்’ இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
வாக்குப்பதிவு முடிந்த பின்னர், 62 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை நிலையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அதைத்தொடர்ந்து, வாக்குச்சாவடிகளில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருந்தால் அதைக் கண்டறிந்து, தேவைப்பட்டால் மறுவாக்குப்பதிவுக்குப் பரிந்துரைக்கவும், படிவம் 17ஏ (வாக்காளர் வருகைப் பதிவேடு) மற்றும் வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்தப்பட்ட பிற தேர்தல் ஆவணங்களை வாக்குப்பதிவுக்குப் பிந்தைய சரிபார்ப்பு குறித்த ஒருங்கிணைந்த அறிவுறுத்தல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.
அதன்படி, தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற அனைத்துத் தொகுதிகளிலும், ஏப்ரல்24ஆம் தேதி பொதுப் பார்வையாளர்கள், 1,825 வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்களால் ஆவணங்கள் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு நடைபெற்ற 75,064 வாக்குச்சாவடிகளிலும் சரிபார்ப்புக்குப் பிறகு எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு இரட்டைப் பூட்டு முறை, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இரண்டடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அறைகளுக்கு ஒரு நாளில் இருமுறை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நேரில் சென்று ஏற்பாடுகளைச் சரிபார்க்க வேண்டும்.
அதேபோல், தலைமையகத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் தினமும் ஒருமுறையும், தலைமையகத்துக்கு வெளியே உள்ள அறைகளுக்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறையும் நேரில் சென்று ஆய்வுசெய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கண்காணிப்பு கேமரா மூலமாக 24 மணி நேரமும் ஸ்ட்ராங் ரூம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிலையத்திலும் தலா 500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் 62 வாக்கு எண்ணும் நிலையங்களின் சுற்றுவட்டாரத்தில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டத் தேர்தல் அலுவலரான ஆட்சியர்கள் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

