கோவை: தன் கடையில் பொருள் வாங்கிய ஒருவருக்கு நான்கு ரூபாய் திருப்பித் தராத கடைக்காரருக்கு கோவை நுகர்வோர் நீதிமன்றம் ரூ.10,000 இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட்டது.
கோவையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், அங்குள்ள அரசு கலைக்கல்லூரிச் சாலையில் உள்ள ஒரு கடையில் பற்பசை வாங்கினார். அதன் அதிகபட்ச விலை ரூ.58 என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், கடைக்காரர் 62 ரூபாய் வாங்கிவிட்டார். எனவே, தன்னிடமிருந்து கூடுதலாகப் பெற்ற நான்கு ரூபாயைத் தரும்படி கடைக்காரரிடம் விஜயகுமார் கேட்டார். ஆனால், கடைக்காரரோ அதற்கு மறுத்துவிட்டார்.
இதனையடுத்து, கடைக்காரர்மீது கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் விஜயகுமார் வழக்கு தொடுத்தார்.
அவரது மனுவை ஏற்றுக்கொண்டு விசாரித்த நீதிபதியும் மன்ற உறுப்பினர்களும், விஜயகுமாரிடம் கூடுதலாக வசூலித்த நான்கு ரூபாயைத் திருப்பித் தரும்படி கடைக்காரருக்கு உத்தரவிட்டனர்.
அத்துடன், விஜயகுமாருக்கு ஏற்பட்ட மனவுளைச்சலுக்காக ரூ.5,000, நீதிமன்றச் செலவாக ரூ.5,000 என மொத்தம் 10,000 ரூபாயை இழப்பீடாக வழங்கும்படியும் கடைக்காரருக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.