தமிழகக் கோயில்களின் சொத்து விவரங்களை மூன்று மாதங்களில் வெளியிட உத்தரவு

தமிழகக் கோயில்களின் சொத்து விவரங்களை மூன்று மாதங்களில் வெளியிட உத்தரவு

1 mins read
a2fdbc01-ab62-45b5-bac8-cc93c44bc9ca
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களின் சொத்துகள், தற்போதைய குத்தகைதார்களின் முழு விவரங்களை 90 நாள்களுக்குள் அறிவிப்புப் பலகைகளில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: டிரிப்அட்வைசர்
Google News Preferred Icon

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களின் சொத்துகள், குத்தகைதார்களின் முழு விவரங்களை மூன்று மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்குத் தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மு.ரவிசங்கர் என்பவர் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் வாடகை விவரங்களைக் கோரி பொதுத் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்திருந்தார். மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் வி.பி.ஆர். இளம்பரிதி இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அறநிலையத்துறை தொடர்பான 2,000க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவற்றில் 90 விழுக்காடு சொத்து விவரங்கள் கோருபவை என்றும் ஆணையர் சுட்டிக்காட்டினார்.

இதனால், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அனைத்துக் கோயில்களின் சொத்துகள், தற்போதைய குத்தகைதார்களின் முழு விவரங்களை 90 நாள்களுக்குள் அறிவிப்புப் பலகைகளில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், நிரந்தர மற்றும் தற்காலிகப் பணியாளர்கள், வாடகை நிலுவை வைத்திருப்போர் பெயர்கள், உலோகப் பொருள்கள், வைப்பு நிதி, சேவைக் கட்டணங்கள், பக்தர்களுக்கான வசதிகள், வரவு-செலவு தணிக்கை அறிக்கைகளையும் வெளியிட ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த உத்தரவுகளைச் செயல்படுத்தியதற்கான ஆவணங்களுடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வரும் நவம்பர் 30ஆம் தேதி தகவல் ஆணையத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
கோயில்சென்னைவீடுகள்வாடகை