சென்னை: கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்தியச் செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்கச் சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சாதியை ஊக்கப்படுத்தக் கூடிய சங்கங்களைச் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்கீழ் பதிவு செய்ய முடியுமா, அந்தச் சங்கங்களின் சார்பில் நடத்தப்படக்கூடிய கல்வி நிறுவனங்களின் பெயர்களின் சாதிப் பெயர்களை நீக்க முடியுமா என்பது குறித்து விளக்கமளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி புதன்கிழமை (ஏப்ரல் 16) தீர்ப்பு வழங்கினார்.
அதில், சங்கத்தின் பெயரில் உள்ள சாதிப் பெயரை நீக்கிச் சங்க சட்ட திட்டத்தில் திருத்தம் செய்து அரசை அணுக வேண்டும் என்று மனுதாரர் சங்கத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
தீர்ப்பில் சாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக் கூடாது என அனைத்துப் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று பதிவுத்துறைத் தலைவருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
சாதிப் பெயர்களைத் திருத்தம் செய்யாத சங்கங்களைச் சட்டவிரோதமான சங்கங்கள் என அறிவித்து அவற்றின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
சாதிச் சங்கங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கிச் சட்டத் திருத்தத்தில் திருத்தம் செய்யக்கூடிய பணிகளை மூன்று மாதங்களுக்குள் துவங்கி ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தினார்.
சாதி சங்கங்கள் நடத்தக்கூடிய பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பெயர்ப் பலகைகளில் உள்ள சாதிப் பெயர்கள் இடம் பெறக் கூடாது என உத்தரவிட நீதிபதி அந்தப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.