தாது மணல் கொள்ளை: சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தாது மணல் கொள்ளை: சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

2 mins read
d97dfb55-6db2-4751-939b-183ddf79a368
மோனோசைட் தாது கடத்தப்பட்டிருப்பதால் அது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் மணல் கொள்ளை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட நிறுவனங்களின் வரவு செலவுக் கணக்குகளை அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி விக்டர் ராஜமாணிக்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கைத் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

தாது மணல் எடுப்பதற்கு 2013ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் தாது மணல் கொள்ளை நடவடிக்கைகள் தொடர்கதையாகி உள்ளன.

அணுசக்தித் தயாரிப்புக்குத் தேவையான மோனோசைட் தாது என்பது மிக முக்கியமான தாதுவாக இருப்பதால் அதைப் பிரித்தெடுக்க மத்திய அரசு யாருக்கும் அனுமதி அளிப்பதில்லை.

மோனோசைட் தாது கடத்தப்பட்டிருப்பதால் அது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும். எனவே, இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது. தாது மணல் சட்டவிரோதமாக எடுத்தது தொடர்பாக மாநில காவல்துறை பதிவு செய்த வழக்குகளை நான்கு வாரங்களில் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். இந்த மணல் கொள்ளையில் அரசியல்வாதிகளின் பங்கு இருக்கிறது என்பதை புறந்தள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்ட விரோதப் பணப்பரிமாற்றம், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் வரவுசெலவுக் கணக்குகளை ஆய்வு செய்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்குத் தெரிவிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்