சிவகங்கை: ரூபாய் குறியீடு ஒரு பிரச்சினையே இல்லை. அவரவர் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறினார்.
வெள்ளிக்கிழமை (மார்ச் 14) சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அக்கருத்தை அவர் தெரிவித்தார்.
“மத்திய அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை மாநில அரசு ஏற்பதாக வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்ததை வரவேற்கிறேன். இனிமேலாவது மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதியை ஒதுக்கும் என நம்புகிறேன்,” என்று திரு சிதம்பரம் கூறினார்.
“ரூபாய் குறியீடு அந்தந்த மொழி அடிப்படையில் குறிப்பிடப்படும். ஆவணங்களில் ரூபாயை Rs என்று தான் பயன்படுத்துகிறோம். இந்தி எழுத்தில் கோடிட்ட ₹ என்ற குறியீட்டைப் பயன்படுத்த முடிந்தால் பயன்படுத்தலாம். எந்த ரூபாய் குறியீட்டை பயன்படுத்துவது என்பது பிரச்சினை அல்ல. குறியீட்டுக்கு பின்னர் குறிப்பிடப்படும் எண்களில்தான் மதிப்பே உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.