நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஓவிய ஆசிரியரான சரவணன் என்பவர், அரிசியில் திருவள்ளுவர் சிலையை வடித்து அசத்தியுள்ளார்.
கன்னியாகுமரிக் கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, திருவள்ளுவருக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாகவும் தனது ஓவியத் திறனை வெளிக்காட்டும் விதமாகவும் அரிசிகளைக் கொண்டு மூன்று அங்குல உயரத்தில் திருவள்ளுவர் சிலையை உருவாக்கியுள்ளார்.
அவரது நுணுக்கமான கைவினைத் திறனை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்து உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டியாய் திகழ்ந்து வரும் திருவள்ளுவருக்கு தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டக் கடலில் 133 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சிலையை வடிவமைத்து 25 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 30) கொண்டாடப்பட உள்ளது.