மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா புதன்கிழமை (ஜனவரி15) காலை 7.30 மணிக்குத் தொடங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின் ஒவ்வொரு சுற்றிலும் 50 முதல் 70 வரையிலான வீரர்கள் போட்டியில் கலந்துகொண்டனர். மொத்தம் 1,100 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டில் 910 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர்.
முதல் சுற்றில் 6 மாடுகளை அடக்கிய பாலமேட்டைச் சேர்ந்த கமல்ராஜ், இரண்டாம் சுற்றில் 2 மாடுகளை அடக்கிய புதுக்கோட்டையைச் சேர்ந்த மணி, மூன்றாம் சுற்றில் 2 மாடுகளை அடக்கிய மேட்டுப்பட்டியைச் சேர்ந்த மிராஷ் ஆகிய மூவரும் இறுதிச் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றனர்.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை அதிக காளைகள் பிடித்த மாடுபிடி வீரர்களில் நத்தம் பார்த்திபன் 8 காளைகளை அடக்கி முன்னிலையில் உள்ளார். இரண்டாவது நிலையில் 6 காளைகளை அடக்கிய பாலமேடு காமராஜ், மஞ்சம்பட்டி துளசி ஆகியோரும் மூன்றாவது நிலையில் 5 காளைகளை அடக்கிய பொதும்பு பிரபாகரனும் உள்ளனர்.
பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் தங்கக் காசு, சைக்கிள், தென்னங்கன்று உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

