பழனி கோவில் முறைகேடு: சிறையில் வழக்கறிஞர் மரணம்

பழனி கோவில் முறைகேடு: சிறையில் வழக்கறிஞர் மரணம்

படம்: நியூஸ் 18

08 Aug 2026 - 6:22 pm

1 mins read

திண்டுக்கல்: பழனி கோவில் நில முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் திடீரென மரணமடைந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் இதே வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்ற கைதிகள் அச்சத்தில் இருப்பதாகத் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பழனி கோவிலுக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தை மோசடியாகப் பதிவு செய்ததாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட 11 பேர் சிபிசிஐடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

அவர்களில் வழக்கறிஞர் அன்வர்தீனும் ஒருவர். இந்நிலையில் நீதிமன்ற அனுமதியின் பேரில் அன்வர்தீன் உள்ளிட்ட நான்கு பேரிடம் மூன்று நாள்களுக்கு விசாரணை நடந்த பிறகு சிபிசிஐடி காவல் துறையினரால் திண்டுக்கல் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டனர்.

பின்னர் நான்கு பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிறையில் இருந்த வழக்கறிஞர் அன்வர்தீனுக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது.

சிறை அதிகாரிகள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும், வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அன்வர்தீன் நீரிழிவு, பக்கவாதம் தொடர்பான பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்ததாகக் குடும்பத்தார் தெரிவித்தனர்.

அவரது திடீர் மரணம் நில மோசடி வழக்கில் கைதாகியுள்ள மற்ற போட்டியாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தினமணி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்
பழனி கோவில்நிலம்மோசடிபதிவுவழக்கறிஞர்உயிரிழப்பு