பன்ருட்டி: தமிழ்நாட்டின் பண்ருட்டி நகருக்கு அருகே நச்சு சாராயம் குடித்து 53 பேர் பலியான வழக்கில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் தினமலர் போன்ற ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளன.
கடலுார் மாவட்டத்தில் மேலஅருங்குணம், ஒறையூர் உள்ளிட்ட கிராமங்களில், 2001ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதியன்று நச்சு சாராயம் குடித்து 53 பேர் பலியாயினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சாராய வியாபாரிகள் உட்பட 22 மீது புதுப்பேட்டை பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து எட்டு பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கு கடலுார் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் நடந்து வருகிறது.
வழக்கில் தொடர்புடைய எழுவர் இறந்துவிட்டனர். தலைமறைவானோரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து, புதுப்பேட்டைக் காவல்துறை அதிகாரிகள் இவ்வழக்கின் ஒன்பதாவது குற்றவாளியான திருப்பூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 58 வயது தோஜா ஆனந்த் என்பவரைக் கடந்த வாரம் கைது செய்தனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று சாராயம் விற்பனை செய்தவரான தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூரைச் சேர்ந்த மாடசாமி, 72, என்பவரை தஞ்சாவூரில் தனிப் படைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இவ்வழக்கில் 23 ஆண்டுகளுக்கு பிறகு, காவல்துறையினர் முக்கிய குற்றவாளியை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.