சென்னை: பூந்தமல்லி-பரந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்தின் தூரம் குறைக்கப்பட்டுள்ளது. பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மெட்ரோ வழித்தடம் சுங்குவார்சத்திரம் வரை மட்டுமே செயல்படுத்தப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளில் இது முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது.
கடந்த ஆட்சிக்காலத்தில் பரந்தூரில் புதிய அனைத்துலக விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை இணைக்கும் வகையில் பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை 53 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்ப்பித்த நிலையில், முந்தைய அரசு 2025 ஜூன் மாதம் ஒப்புதல் அளித்து அரசாணையும் வெளியிட்டது.
எனினும், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அமைந்த புதிய அரசு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வதாகச் சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் காரணமாகவே மெட்ரோ திட்டத்தின் பாதையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இத்திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
அதில் இரண்டாம் கட்டமாக சுங்குவார்சத்திரத்தில் இருந்து பரந்தூர் வரை 25 கி.மீ. தொலைவு ரூ. 7,000 கோடி செலவில் அத்திட்டம் செயல்படுத்தப்பட இருந்தது.
தற்போது பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், முதல் கட்ட திட்டமான பூந்தமல்லி– சுங்குவார்சத்திரம் வரையிலான பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டுப் பங்களிப்புடன் இத்திட்டம் நிறைவு பெறவுள்ளது.


