சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தை சட்டப் போராட்டம் மூலம் எதிர்க்க போராட்டக்குழு தயாராகி உள்ளது.
இதுகுறித்து விமான நிலையத் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவின் தலைவர் ஜி சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில், சாதி, மதம் கடந்து இந்தப் போராட்டத்தில் அனைவரும் காட்டிவரும் ஒற்றுமையே மிகப்பெரிய பலம் என்று குறிப்பிட்டுள்ளார்.
“இந்த ஒற்றுமையால்தான் ஏகனாபுரம் கிராமத்துக்குள் தமிழக அரசால் இதுவரை ஓர் அடிகூட முன்னேற முடியவில்லை. ஆளும் கட்சியைத்தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் நமது போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பது கூடுதல் வலிமை சேர்க்கிறது.
“மக்களின் சம்மதம் இன்றி இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்பதை அரசு நன்கு உணர்ந்துள்ளது,” என்று ஜி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பரந்தூர் மண்ணைக் காக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் போராட்டக்குழு சார்பாக பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த வழக்கு உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை பல்வேறு நிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது எனக் கூறியுள்ளார்.
சட்டப்போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற்று விவசாய நிலங்களும் தங்களுடைய கிராமமும் காப்பாற்றப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

