கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் கிஷோர் மருத்துவம் படிப்பதற்காக ரஷ்யா சென்றார்.
அங்கு குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் கூறி அந்நாட்டு அதிகாரிகள் அவரைக் கைதுசெய்ததாகவும் சிறையில் இருக்கும் அவரைப் போருக்கு அனுப்ப அந்நாட்டுக் காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரஷ்ய சிறையில் வாடும் மகனை உயிருடன் மீட்டுத் தரக்கோரி கிஷோரின் பெற்றோர் மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 வயதான கிஷோர் 2021ஆம் ஆண்டு ரஷ்யாவிற்கு மருத்துவப் படிப்பதற்காகச் சென்றார்.
அங்கு எடப்பாடியைச் சேர்ந்த 25 வயது நித்திஷுடன் கிஷோருக்குப் பழக்கம் ஏற்பட்டது. மருத்துவம் மூன்றாம் ஆண்டு படிக்கும் நித்திஷும் கிஷோரும் ஒரே அறையில் தங்கினர்.
படிப்புச் செலவுக்காக இருவரும் தளவாட நிறுவனத்தில் பகுதிநேரப் பணிக்குச் சென்றனர். வாடிக்கையாளர்களிடம் பொருள்களை விநியோகம் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.
அப்போது ரஷ்யாவில் தடை செய்யப்பட்ட பொருள் இருந்த பொத்தானை வாடிக்கையாளர் ஒருவருக்கு அவர்கள் விநியோகம் செய்ததாகக் கூறப்பட்டது. இதையறிந்த அந்நாட்டு காவல்துறையினர் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இருவரையும் பிணையில் எடுக்க அவர்களின் பெற்றோர் போராடி வந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், அவர்களை உக்ரேன் போரில் பயன்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிடுள்ளதாகவும், அதற்கான ஆவணங்களில் அவர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது.
“எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. போருக்கு அனுப்பினால் உயிருக்குப் பாதுகாப்பில்லை; எப்படியாவது என்னை மீட்டுவிடுங்கள்,” என்று கிஷோர் ஒலிவழிச் செய்தியைத் தங்களுக்கு அனுப்பியதாகக் கிஷோரின் பெற்றோர் ஊடகத்திடம் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ரஷ்யாவில் கைதாகி வெளிவர முடியாமல் சிக்கித் தவிக்கும் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோரை மீட்கக்கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெற்றோர், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.