சென்னை: தனியார் பொழுதுபோக்குப் பூங்காவில் ராட்சத ராட்டினம் ஒன்று வேகமாகச் சுற்றிக் கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறால் நின்று போனது. இதனால், அதில் இருந்து இறங்க முடியாமல் பலர் சிக்கித் தவித்தனர்.
சென்னை கிழக்குக் கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் பகுதியில் அப்பூங்கா செயல்பட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமை (மே 27) இரவு, ஏழு மணியளவில் அங்குள்ள ராட்சத ராட்டினத்தில் 35 பேர் ஏறினர். அப்போது திடீரென ராட்டினம் பழுதாகி, செங்குத்தாக 150 அடியில் நின்றது என்றும் அதில் இருந்தவர்கள் மூன்று மணிநேரம் சிக்கித் தவித்த பிறகே தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டனர் என்றும் அங்கிருந்தவர்கள் கூறினர்.
பூங்கா நிர்வாகம் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனப் பொதுமக்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். மேலும், பூங்காவைத் திறக்க காவல்துறை தற்காலிகமாக தடை விதித்தது.
மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் முறைகேடுகள் இருந்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.