கட்​சிப் பேரணிகள்: கட்​ட​ண​ம் வசூலிக்க உயர்நீதிமன்றம் அறி​வுறுத்​தல்

2 mins read
42ddb8a8-f867-4be8-bab9-a21cdaa3fc83
அரசியல் கட்சியினர் நடத்தும் நிகழ்வுகளால் காவல்துறையினருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது என்று நீதிமன்றம் தெரிவித்தது. - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 4

சென்னை: அரசியல் கட்சிகள் நடத்தும் பேரணி, பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் வேலை இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இனி வரும் நாள்களில் அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்குக் காவல்துறை பாதுகாப்பு அளித்தால் அதற்குச் சம்பந்தப்பட்ட கட்சியினரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) சீமான் தலைமையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், திருப்போரூரில் உள்ள கோயில் திருவிழாவைக் காரணம் காட்டி காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். இருப்பினும் அமைதியான முறையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். அப்போது நீதிபதி “காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும். மேலும் காவல்துறை பாதுகாப்பு வழங்க ரூ. 25,000 கட்டணமாக நாம் தமிழர் கட்சி செலுத்த வேண்டும்,’’ என்றார்.

அதற்கு நாம் தமிழர் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, ரூ. 25,000 செலுத்த வேண்டும் என்பதை உத்தரவிலிருந்து நீக்கினார்.

பின்னர் நீதிபதி, ‘‘பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும், சட்ட ஒழுங்கைக் கட்டிக்காக்கவும் பணியமர்த்தப்பட்டுள்ள காவல்துறையினர், இதுபோன்ற அரசியல் கட்சியினர் நடத்தும் நிகழ்வுகளுக்கும் பாதுகாப்பு அளிக்க நேரிடுவதால் அவர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது,” என்று குறிப்பிட்டார்.

மக்களின் வரிப்பணத்தில் தான் காவல்துறை பம்பரமாகச் சுழன்று இயங்கி வருகிறது. அந்த வரிப்பணத்தை வீணடிக்கக்கூடாது. எனவே, அரசியல் கட்சியினர் இதுபோல நடத்தும் நிகழ்வுகளில் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் இழப்பு ஏற்பட்டாலோ அதற்குச் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

“எனவே, அரசியல் கட்சியினர் நடத்தும் நிகழ்வுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கக் காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டால் குறிப்பிட்ட தொகையை அக்கட்சியினரிடம் இருந்து கட்டணமாகக் காவல்துறை வசூலிக்க வேண்டும்’’ என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி ஜி.கே.இளந்திரையன்.

குறிப்புச் சொற்கள்