கோவை: ஒரே கிராமத்தைச் சேர்ந்த பகுதிகள் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் எல்லைக்குள் இடம்பெற்றிருப்பதால் நிர்வாக ரீதியாக பல சிக்கல்கள் எழுந்துள்ளன.
பொன்னாண்டம்பாளையம் என்ற இந்த விநோத கிராமம் கோவையில் அமைந்துள்ளது.
இக்கிராமத்தில் மொத்தம் ஏழு தெருக்கள் மட்டுமே உள்ளன. ஆனால், அவை அவிநாசி, சூலூர் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகளுக்குள் அமைந்துள்ளன. அதாவது, ஏழு தெருக்களைக் கொண்ட இந்தக் கிராமம், நான்கு உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் ஒன்றுசேரும் இடத்தில் அமைந்துள்ளது என்பதுதான் சிக்கல்.
பொன்னாண்டம்பாளையத்தில் ஏறக்குறைய 300 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆனால் இங்கு அடிப்படை வசதிகள்கூட இல்லை. மேலும், அனைத்துத் தேவைகளுக்கும் பல நிர்வாகச் சிக்கல்களை மக்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
“இக்கிராமத்தில் இருப்பதே 200 வீடுகள்தான். புலம்பெயர் ஊழியர்கள் உட்பட 650 பேர் வசிக்கிறோம்.
“தேர்தல் என்று வந்துவிட்டால் இரண்டு தெருக்களைச் சேர்ந்தவர்கள் அவிநாசி தொகுதியைச் சேர்ந்தவர்களாகவும் மற்ற ஐந்து தெருக்களைச் சேர்ந்தவர்கள் சூலூர் தொகுதி வாக்காளர்களாகவும் கருதப்படுகின்றனர்.
“இதனால் எந்த நன்மையும் இல்லை. 20 ஆண்டுகளாக அடிப்படைத் தேவைகளுக்கே போராடி வருகிறோம்,” என்று பொன்னாண்டம்பாளையம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, அக்கிராமத்தை சூலூர் சட்டப்பேரவைக்கு உட்பட்ட கணியூர் ஊராட்சி எல்லைக்குள் ஒரே உள்ளாட்சி அமைப்பின்கீழ் இணைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

