சிறுவனின் மூச்சுக்குழாயிலிருந்து பேனா மூடி அகற்றம்

சிறுவனின் மூச்சுக்குழாயிலிருந்து பேனா மூடி அகற்றம்

1 mins read
a2afb337-90f4-43f2-83d8-b987a2af28de
சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள். வலது படம்: சிறுவனின் மூக்கில் இருந்து அகற்றப்பட்ட பேனா மூடி. - படங்கள்: தினமணி
Google News Preferred Icon

சிதம்பரம்: சிதம்பரத்திலுள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15 வயது சிறுவனின் மூச்சுக்குழாயில் புகுந்த பேனா மூடியை மருத்துவர்கள் அகற்றிச் சாதனை படைத்தனர்.

தவறுதலாகப் பேனா மூடியை அச்சிறுவன் சுவாசித்துவிட்டதால், கடுமையான மூச்சுத்திணறல் அறிகுறிகளுடன் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) இரவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டான்.

உடனடியாக மேற்கொள்ளப்பட்ட அவசர ‘சிடி ஸ்கேன்’ பரிசோதனையில், பேனா மூடி வலப்புற மூச்சுக்குழாயின் ஆழத்தில் பதிந்திருந்தது உறுதியானது.

வெளிப்பொருளின் கடினமான இருப்பிடம் காரணமாக, இந்தச் சிகிச்சைக்கு மிகுந்த திறமையும் தொழில்நுட்ப நிபுணத்துவமும் நீண்டகால அனுபவமும் தேவைப்பட்டன.

மயக்கவியல் துறையினரின் ஒப்புதலுடன், காது மூக்கு தொண்டை துறைத் தலைவர் பேராசிரியர் மருத்துவர் ரூட்டா சண்முகம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இச்சிகிச்சையை மேற்கொண்டனர்.

சிகிச்சைக்குப் பிறகு சிறுவனின் மூச்சுத் திணறல் நீங்கி, அவனது உடல்நிலை தற்போது நலமாகவும் சீராகவும் உள்ளது.

இது குறித்துக் கல்லூரி முதல்வர் என். பாஸ்கரன், “சிக்கலான இச்சூழலைக் கையாள்வதில் மருத்துவர்கள், பணியாளர்களின் சிறப்பான ஒருங்கிணைப்பும் குழுப்பணியுமே வெற்றிக்குக் காரணம்,” என்றார்.

அவசர சிகிச்சையளித்துச் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினருக்கு, அவனது பெற்றோர் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

சாதனை படைத்த மருத்துவக் குழுவினரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் என். பாஸ்கர், கண்காணிப்பாளர் மருத்துவர் ஜூனியர் சுந்தரேஷ் ஆகியோர் பாராட்டினர்.

குறிப்புச் சொற்கள்
அறுவை சிகிச்சைசிறுவன்மருத்துவர்உடல்நலம்