கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்காவிட்டால் அபராதம்: தமிழக அரசு

2 mins read
1c046d61-40fa-480a-9896-219c6ffc61a8
அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி ஒவ்வொரு நிறுவனங்களின் பெயர் பலகையும் தமிழில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. அனைத்து பெயர் பலகையிலும் தமிழைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அனைத்து பொது இடங்களிலும் உள்ள பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையும், தொழிலாளர் நல ஆணையமும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்பட வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் இதை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஏற்கெனவே ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு அபராதம் 50 ரூபாய் என இருந்த நிலையில் இப்போது ரூ.2,000 அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன் பிறகு தொழிலாளர் நலத்துறை சார்பில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மற்றும் நிறுவனங்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி ஒவ்வொரு நிறுவனங்களின் பெயர் பலகையும் தமிழில் இருக்க வேண்டும். அவர்கள் பிற மொழியைப் பயன்படுத்துவதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் அந்த பெயர் பலகையில் தமிழ் பெரிய அளவில் இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி பெயர் 5:3:2 என்ற வகையில் இடம் பெற வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்