ஓய்வூதிய அலுவலகம் மூடல்; தலைவர்கள் கடும் கண்டனம்

2 mins read
846d3c29-57f3-486e-a6ab-3e88411256ea
ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் கானல் நீராகிவிட்டது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். - கோப்புப் படம்: ஊடகம்

சென்னை: ஓய்வூதிய இயக்குநரகம் மூடப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.

இனி பழைய ஓய்வூதியத் திட்டம் எந்தக் காலத்திலும் தமிழகத்தில் மீண்டும் வராது என்பதை அது கட்டுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து தமது எதிர்ப்பை பதிவு செய்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், மகளிர் இரு சக்கர வாகனத்துக்கான மானியம் வழங்கும் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டது. தற்போது அரசு தகவல் தொகுப்பு விவர மையம், ஓய்வூதிய இயக்குநரகம், சிறு சேமிப்பு இயக்குநரகம் போன்றவற்றை கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையுடன் இணைத்து இந்த மூன்று துறைகளுக்கும் மூடுவிழா நடத்தி அரசாணை பிறப்பித்துள்ளது. இது பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் கானல் நீராகியுள்ளது. முதல்வருக்கு சமூக நீதியை நிலைநாட்ட வேண்டுமென்ற அக்கறை இருக்குமானால் இந்த ஆணையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், “தமிழகத்தில் தனித்தனி அமைப்புகளாக செயல்பட்டு வந்த ஓய்வூதிய இயக்குநரகம், அரசு தகவல் தொகுப்பு விவர மையம், சிறுசேமிப்பு இயக்குநரகம் கலைக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியக்காரர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

“பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படாது என்பது மிகவும் கசப்பான செய்தி. திமுக வெற்றி பெற்று ஆட்சியைப்பிடித்ததற்கு காரணம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்தான். ஆனால், இப்போது அவர்களுக்கே மிகப்பெரிய துரோகத்தை திமுக செய்திருக்கிறது,” என்று அவர் கூறியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “ஓய்வூதிய இயக்குநரகம் மூடப்பட்டதால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் எனும் நீண்டநாள் கோரிக்கை எக்காலத்திலும் நிறைவேறாது என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. மறுசீரமைப்பு எனும் பெயரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிரான விரோதப் போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்