சென்னை: பொங்கல் பண்டிகையை வழக்கம்போல் உற்சாகமாகக் கொண்டாட தமிழக மக்கள் தயாராகி வருகின்றனர்.
சென்னை, அதன் புறநகர் பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் கடந்த இரு தினங்களாக புத்தாடைகள் வாங்க பொதுமக்கள் திரளாகக் கூடினர்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஒன்பது நாள்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலானோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வரும் 10ஆம் தேதியன்றே சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து, புத்தாடைகள் வாங்க சென்னையில் உள்ள துணிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. பலர் குடும்பத்தோடு கடைகளுக்கு வந்ததால் சென்னையில் சில பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் வாகனமோட்டிகள் அவதிக்கு ஆளாகினர். தியாகராய நகர், பழைய வண்ணாரபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து சிறிது நேரம் தடை செய்யப்பட்டது.
நகைக்கடைகளிலும் ஏராளமான மக்கள் குவிந்தனர். மேலும் உணவகங்கள், இனிப்புகள் விற்கும் கடைகளிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. திருநெல்வேலி, சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பானைகள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
வண்ணம் பூசப்படாத மண் பானைகள் அதிகபட்சமாக ரூ.200 வரையிலும் வண்ணம் பூசப்பட்ட பானைகள் ரூ.500 வரையும் விற்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.