பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் வட்டாரத்தில் உள்ள குண்டுலுபேட்டை தாலுக்காவைச் சேர்ந்த பொம்மலபுரம் என்னும் சிற்றூருக்கு அருகேயுள்ள காட்டில் இருந்து புலி ஒன்று அடிக்கடி பொம்மலபுரத்திற்குள் நுழைந்து, அங்குள்ள கால்நடைகளை வேட்டையாடி வந்தது. புலியின் நடமாட்டத்தால் அங்கு வாழும் மக்கள் அச்சத்தால் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடந்தனர். இதுகுறித்து காட்டுவளத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
ஊர் மக்களை அச்சுறுத்தி வரும் புலியைப் பிடிப்பதற்காக வனத்துறை, ஏழு அதிகாரிகளை அனுப்பி வைத்தது. ஆனால், அந்த அதிகாரிகளால் புலியைப் பிடிக்க முடியவில்லை. நாள்களைக் கடத்தி வந்தனர். அதிகாரிகளாலும் வருகையால் இருந்த மக்களுக் புலியைப் பிடிக்க முடியவில்லை என்பது பெரிய ஏமாற்றமாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்தது.
அதனால் ஆத்திரமடைந்த மக்கள், அந்தக் காட்டுவளத் துறை அதிகாரிகள் ஏழு பேரையும் பிடித்து, அவர்களை வலுக்கட்டாயமாக அந்தப் புலிக்கூண்டுக்குள் தள்ளிப் பூட்டி வைத்தனர்.
வனத்துறையினரால் புலியைப் பிடிக்க முடியவில்லை. எனவே, நாங்கள் அந்தப் புலியிடன் இழந்த கால்நடைகளுக்காக வனத்துறை எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
பொம்மலபுரச் சிற்றூர் விவசாயிகளின் தலைவர் ஹொன்னுரு பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புலியால் தொல்லை என காட்டுவளத்துறைக்குப் புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இத்தனை பேரை அனுப்பியும் அவர்களின் அலட்சியப் போக்கால், புலியைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. எனவே, புலியிடம் தங்கள் கால்நடைகளை இழந்த மக்களுக்கு வனத்துறை உடனடியாக இழப்பீடு தருவதோடு, எங்களுக்குப் பாதுகாப்பும் அளிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

