காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் எனப் போராட்டக் குழு வலியுறுத்தி உள்ளது.
கடந்த ஆயிரம் நாள்களுக்கும் மேலாக புதிய விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து பரந்தூர் மக்கள் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் பரந்தூர் போராட்டக் குழுவினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தலைவர்களில் முதல்வர் ஜோசப் விஜய்யும் ஒருவர்.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் அவரது தலைமையிலான தவெக வெற்றி பெற்றிருப்பது இந்த விவகாரத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
தங்களுடைய விளைநிலங்கள், வீடுகள் கைவிட்டுப்போகுமோ என்ற அச்சத்தில் இருந்த பரந்தூர் மக்களுக்குத் தேர்தல் முடிவுகள் நிம்மதி அளித்திருந்தாலும் விமான நிலையத் திட்டத்தை முழுமையாகக் கைவிடும் அறிவிப்பை விஜய் அரசு வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் முதல்வராகி உள்ளதால், இத்திட்டத்தை எளிதாக ரத்து செய்ய முடியும் என்று போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆர்.எல். இளங்கோ தெரிவித்துள்ளார்.
“விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வேறு மாற்று இடங்களில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைந்தால், இங்கு நீர்நிலைகளில் தேங்கவேண்டிய உபரிநீர் அனைத்தும் சென்னைக்குள்தான் செல்லும்,” என்று இளங்கோ எச்சரித்துள்ளார்.

