தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மக்களை இணைக்கும் மதிப்பான திட்டங்கள்

5 mins read
bf83ea6a-2934-41ec-a10a-84c2a9f6b6ac
சதுரங்கப் போட்டி அட்டையைப் போல் வர்ணம் பூசப்பட்ட சென்னை நேப்பியர் பாலம். - படம்: ஊடகம்
multi-img1 of 2

சென்னை: தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டம் மூலம் மாநிலம் முழுவதும் 10,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய ஊரகச் சாலைகள் அமைக்கப்படுகின்றன என கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதன் மூலம் அனைத்து மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரிவினரும் பயனடைவர் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். 10,000 கிலோ மீட்டர் சாலைகளை அமைக்க தமிழக அரசு ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கியது.

முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டமானது தமிழகத்தின் பொருளியல் முகத்தை முற்றிலுமாக மாற்றி அமைக்கும் என்கிறார் மாநிலத் தொழில்துறை அமைச்சர் எ.வ.வேலு.

இந்திய அளவில் தமிழகத்தில் நல்ல, முழுமையான சாலை இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசு கூறுகிறது. தமிழகத்தில் 100 கிலோ மீட்டர் பரப்புக்கு 153 கிலோ மீட்டர் தூரத்துக்குச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தேசிய சராசரியான 100 கிலோ மீட்டருக்கு 103 கிலோ மீட்டர் என்ற சாலை அடர்த்தியைவிட கூடுதலாகும். கடந்த ஏப்ரல் 1946ஆம் ஆண்டில் தமிழக அரசு தனியாக நெடுஞ்சாலைத் துறையை நிறுவியது.

இந்தத் துறை இப்போது நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் எனப் பெயர் மாற்றம் கண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தேசிய – மாநில நெடுஞ்சாலைகள், பிற முதன்மை மாவட்டச் சாலைகளைக் கட்டமைப்பதற்கும், பராமரிப்பதற்கும் இத்துறை பொறுப்பெற்றுள்ளது.

மூன்று மடங்கு நிதி ஒதுக்கீடு:

இந்திய அளவில் வேகமாக வளரும், நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பு தரும் மாநிலமாக தமிழகம் விளங்குவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க மத்திய அரசு முன்பைவிட மூன்று மடங்கு அதிக நிதியை ஒதுக்கி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நெடுஞ்சாலை இணைப்புத் தூரம் 22,326 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது.

இதுபோன்ற சாலைத் திட்டங்கள்தான் ஒரு மாநிலத்தின், ஒரு நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு உதவும் என பிரதமர் மோடியும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒரு சேரச் சொல்லி வருகிறார்கள்.

திருச்சி, ராமேசுவரம், மதுரை, சிதம்பரம் எனப் பல்வேறு தொழில், வணிக மையங்களை இணைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அதேபோல் அதீத கடல் வளம் கொண்ட தமிழகத் துறைமுகங்களை இணைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுகின்றன. நடப்பாண்டு நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறைக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.

தமிழகத்தில் விரிவான சாலை மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.23,365 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு செயல்படுத்தும் புதிய திட்டங்கள் மூலம் துறைமுகங்கள், கிராமப்புறச் சந்தைகள், சிறு நகரங்கள், தளவாட மையங்கள், சுற்றுலாத்தலங்கள் என பொருளியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு இடையே எளிதான இணைப்பு ஏற்படுத்தப்படும்.

இதன்மூலம் தமிழகத்தின் சாலை போக்குவரத்து உரிய மாற்றத்தை பெறப்போகிறது என்கிறது தமிழக அரசு.

9 ஆண்டுகளில் 2,000 கி.மீ. நெடுஞ்சாலைகள்:

இது தொடர்பான சில புள்ளி விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 2004 முதல் 2014 வரை தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் சுமார் 800 கிலோ மீட்டர் எனில், 2014 முதல் 2023 வரை அமைக்கப்பட்ட சாலைகளின் நீளம் 2,000 கிலோ மீட்டர் ஆகும்.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சாலைகள், பாலங்கள் கட்டுமானப் பணிக்கு ரூ.9,324 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 16,596 கிலோ மீட்டர் சாலைகள், 425 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

வேளாண், தொழில்துறை உற்பத்தி அதிகரிக்கும்:

ஊரகப் பகுதிகளில் 10,000 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்படும் என்று 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்ததில் இதுவரை 8,120 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டு விட்டதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.

இவ்வாறு ஊரகப் பகுதிகளில் அமைக்கப்படும் சாலைகள் மூலம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நலன் காக்கப்படும் என்றும் வேளாண்துறை, தொழில்துறை உற்பத்தி அதிகரிக்கும் என்றும் தமிழக முதல்வர் கூறுகிறார். மேலும் உள்ளீட்டுச் செலவுகள் குறையும் என்றும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

துறைமுகம், மெட்ரோ ரயில், விமான நிலைய விரிவாக்கம்:

தமிழகத்தில் உள்ள குளச்சல் துறைமுகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில், இயற்கை துறைமுகமாக உள்ள இதை மத்திய அரசு ஏற்று ரூ.21,000 கோடி செலவில் நாட்டின் மிகப்பெரிய துறைமுகமாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிக நீளமான கப்பல் (மதர் வெசல்ஸ்) ஒரு துறைமுகத்துக்கு வந்து செல்ல கடல் ஆழம் குறைந்தபட்சம் 18 மீட்டர் இருக்கவேண்டும். குளச்சல் துறைமுகம் இயற்கையாகவே 20 மீட்டர் ஆழம் கொண்டது.

இதேபோல் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், தூத்துக்குடி விமான நிலையங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நீர்வழிப் போக்குவரத்திலும் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. நாகை - இலங்கைக்கு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டமும் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் பிற மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.

அண்மையில் சாலைக் கட்டமைப்பு குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது சென்னையில் போக்குவரத்து சாலைகளை விரிவுபடுத்து வதற்கான சாத்தியக் கூறுகள், புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

கண்ணுக்குப் புலப்படும் வளர்ச்சி:

சரி, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதால் நேரடியாக கண்களுக்கு புலப்படும் வளர்ச்சி என்று ஏதும் உள்ளதா?

தலைநகரான சென்னையின் புறநகர்ப் பகுதியில் உள்ளது பழைய மகாபலிபுரம் சாலை.

தென் சென்னையில் தொடங்கி சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் காஞ்சிபுரம் வரை நீண்டுள்ள இச்சாலையின் இருபுறமும் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வானளாவிய கட்டடங்களை அமைத்துச் செயல்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக, அங்கு ஏராளமான சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் யாராலும் சீண்டப்படாத இடமாக இருந்த பழைய மகாபலிபுரம் சாலை இன்று போக்குவரத்து நெரிசலால் விழிபிதுங்கி நிற்கிறது.

சென்னை புறநகர்ப் பகுதிகள் பலவும் இன்று ‘கிரேட்டர் சென்னை’ என்ற பெயரில் தலைநகருடன் இணைக்கப்பட்டுள்ளன. சென்னை முழுவதும் மிகக் குறுகிய காலகட்டத்தில் தனியார் கட்டுமான நிறுவனங்கள் ஏராளமான குடியிருப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் சென்னையும் மும்பையைப் போல் மாறும் என்பதே பலரது கணிப்பாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்