தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெள்ளத்தில் மிதக்கும் தென்மாவட்டங்கள்; தமிழகத்தில் 40 ஆயிரம் ஏரிகள் நிரம்பின

2 mins read
7cec75e4-a39c-4fcf-97c4-ee315378336f
திண்டுக்கல் மாவட்டத்தில் பெருமழை பெய்துகொண்டிருக்கிறது. அதையடுத்து தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. - படம்: ஊடகம்

நெல்லை: தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி என பல மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை மூன்று நாள்களாக தொடர்ச்சியாக மழை பெய்தது. அங்கு பெய்துவரும் பெருமழையால் அணைகள், நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் சில இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொடைக்கானலில் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.

திண்டுக்கல் மாவட்டத்தின் பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மலைச் சிற்றூர்களில் வாழும் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மழை காரணமாக பல இடங்களில் மின்கம்பங்களும் கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் ஆங்காங்கே சாலையோர மரங்களும் சாய்ந்து விழுந்தன.

பழநி - கொடைக்கானல் மலைச்சாலை, பழநி வண்டி வாய்க்கால் பகுதியில் மரங்கள் சாலையில் சாய்ந்து விழுந்தன. ஆடலூர் பன்றிமலை மலைச்சாலையில் பாறைகள் உருண்டு விழந்தன. அதனால் போக்குவரத்து பெரிதும் பாதித்தது. பழநி அருகே ஆயக்குடியில் குடியிருப்புப் பகுதியிலுள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெருமழையால் சிற்றூர்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டிலும் பெருமழை

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் வியாழக்கிழமை முதலே கன மழை பெய்து வருகிறது. இதில், கடந்த 24 மணி நேரத்தில் மதுராந்தகம் பகுதியில் சுமார் 123 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், மாம்பாக்கம், பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதனால், மதுராந்தகத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வியாழக்கிழமை முதல் கடந்த இரண்டு நாள்களாகத் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது.

பல பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. தாமிரபரணி மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்