சென்னை: புதுச்சேரியில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “திராவிடத்தையும், பெரியாரையும் எதிர்ப்பதுதான் எனது கொள்கை. மண்ணின் விடுதலைக்காக தனது சொத்தை விற்றவர் வஉசி. ஆனால், சொத்துக்காக திருமணம் செய்தவர் பெரியார்,” எனக் கூறியிருந்தார்.
அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மனித குலத்தின் சமூக விடுதலைக்குப் போராடிய மாபெரும் தலைவர் பெரியார். அவர், தன் வாழ்நாளின் கடைசி நாட்கள் வரை சமூக நீதிக்காகச் சளைக்காமல் பாடுபட்ட திராவிட இயக்கப் பெருந்தலைவர்.
மனிதர்களிடையே சாதி, மதம், மொழி, நிறம், பாலினம் என எந்தவகை ஏற்றத்தாழ்வும் இல்லாத சமத்துவச் சமுதாயம் அமைந்திட வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்.
அவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைச் சிந்தனைகள் சமுதாயத்தின் இருட்டை விரட்டி வெளிச்சத்தை உண்டாக்கின. தன்னுடைய கருத்துகளாகவே இருந்தாலும் அதனைக் கேட்பவர்கள் தங்களுடைய சொந்த புத்தியினால் சிந்தித்து, அதன் பிறகே ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய உலகச் சிந்தனையாளர்.
பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் சமபங்கு கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றி, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட முனைந்தவரும் அவர்தான். அந்தச் சட்டத்தின்படி அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி வழங்கப்படுகிறது.
“மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம்” என்று 1936-ஆம் ஆண்டிலேயே குடிஅரசு ஏட்டில் பெரியார் எழுதியிருக்கிறார். அவர் சொல்லியுள்ளபடி, மானமற்ற கூட்டத்துடன் நாம் மல்லுக்கட்ட வேண்டியதில்லை. தன் மீதான அவதூறுகளை தன் கொள்கைத் தடியால் அடித்து நொறுக்கி, சமுதாயத்திற்கு விடியலைத் தந்தவர். அறிவிலிகளின் அவதூறுகளால் அவர் புகழை ஒருபோதும் மறைக்க முடியாது.

