புகையிலை பொருள்களுக்கு நிரந்தரத் தடை: உயர்நீதிமன்றம் விருப்பம்

1 mins read
d0536d5c-a9ee-41fb-9f5f-08853948fe44
படம்: - ஊடகம்

மதுரை: இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் குட்கா, கூல் லிப், புகையிலை போன்ற போதைப்பொருள்களுக்கு நிரந்தரத் தடைவிதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு உட்பட்ட மாவட்டங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை, ஹான்ஸ் போன்ற போதைப்பொருள்களை விற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பிணை வழங்கக்கோரி தாக்கலான மனுக்கள் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 4) விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு, மாநில அரசு ஆகிய இருதரப்பினரின் வாதங்களையும் நீதிபதி பதிவுசெய்தார். “தற்போது கூல் லிப், குட்கா புகையிலைப் பொருள்களை இளைஞர்களைத் தாண்டி பள்ளி மாணவர்களும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இவர்களைப் பாதிக்கக்கூடிய அளவிற்கு விற்பனை நடைபெற்று வருகிறது. பல பள்ளி மாணவர்கள் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது,” என்றார் நீதிபதி.

“அரசு கள்ளச் சாராயம், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்பவர்கள்மீது எவ்வாறு குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கிறார்களோ அதே போல கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இதனை முற்றிலும் தடை செய்ய முடியும்,” என அவர் கூறினார்.

“எனவே இந்த நீதிமன்றம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு விரைவில் போதைப்பொருட்களைத் தடை செய்வது குறித்து உரிய வழிமுறைகளைப் பிறப்பிக்க உள்ளது,” எனக் கூறி தீர்ப்புக்காக வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

குறிப்புச் சொற்கள்