தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகம் முழுவதும் 4,390 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி

2 mins read
73cf99b3-ce04-4209-b66a-277019544269
தற்காலிக பட்டாசு கடைகள். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 4,390 பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க விற்பனை உரிமம் கோருவோர், தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல் துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயம். இதில் தீயணைப்புத் துறையின் சான்றிதழ் கிடைத்த பின்னரே, பிற துறைகளிடம் இருந்து சான்றிதழ் பெற முடியும்.

அந்தவகையில், நடப்பாண்டில் தீபாவளிக்கு பட்டாசு கடைகள் வைக்க தடையில்லா சான்றிதழ் கோரி தமிழ்நாடு முழுவதும் 6,578 விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்தன. இதில் 4,390 பட்டாசு கடைகள் வைப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டு உள்ளது. எஞ்சிய விண்ணப்பங்கள் அடுத்த 10 நாள்களில் பரிசீலிக்கப்பட உள்ளதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள், “தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான விண்ணப்பங்கள் இணையத்தளம் மூலம் பெறப்படுகிறது. தாமதம் இல்லாமல் சரியான நேரத்தில் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. போதிய பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத கடைகளுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

“தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள கடைகளுக்கு வெடிபொருள் சட்டத்தின்படி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னர் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

“கல்யாண மண்டபம், கேளிக்கை அரங்கம் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாள்கள் இருப்பதால் பட்டாசு கடைகளுக்கான விண்ணப்பங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர்கள் கூறினார்கள்.

குறிப்புச் சொற்கள்