சென்னை: தமிழகத்தில் புதிதாக ‘ஹைட்ரோகார்பன்’ கிணறுகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக வெளியான தகவல் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ‘ஹைட்ரோகார்பன்’ சோதனைக் கிணறுகள் அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) அனுமதி வழங்கியுள்ளதாக அத்தகவல் தெரிவிக்கிறது.
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ஓஎன்ஜிசி, கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசின் திறந்தவெளி ஏலத்தின் மூலம் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு அனுமதி பெற்றது.
இத்திட்டத்துக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 20 கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்தத் திட்டத்துக்கான பணிகளை தற்போது ஓஎன்ஜிசி நிறுவனம் தொடங்கி இருப்பதாகத் தெரிகிறது. அனுமதி பெற்றுள்ள 20 இடங்களிலும் ஏறக்குறைய 3,000 மீட்டர் ஆழத்தில் சோதனைக் கிணறுகள் அமைக்க அனுமதிக்கும்படி தமிழக அரசிடம் அந்த நிறுவனம் அனுமதி கேட்டிருந்த நிலையில், அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனிச்சியம், பேய்குளம், கீழ்செல்வனூர், வேப்பங்குளம், காவனூர், காமன்கோட்டை, சிறுவயல் உள்ளிட்ட கிராமங்களில் 20 கிணறுகளை அமைக்கும் பணி விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய திட்டங்களால் விவசாயமும் சுற்றுச்சூழலும் வெகுவாகப் பாதிக்கப்படும் என தொடக்கம் முதல் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், நிலத்தடி நீர் மாசுபட்டு, விவசாயம் பாதிக்கப்படும் என்றும் அம்மாவட்டமே பாலைவனம் ஆகிவிடும் என்றும் விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாமக (ராமதாஸ்), அமமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.