தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொது இடங்களில் சிலை எழுப்ப அனுமதி வழங்கக்கூடாது: உயர் நீதிமன்றம்

2 mins read
851d6b1f-8bbb-48de-b8f4-db00a2e21321
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. - கோப்புப்படம்டு: விக்கிமீடியா

மதுரை: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி பொது இடங்களில் சிலைகள் எழுப்ப வருங்காலத்தில் அனுமதி வழங்காமல் இருப்பதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நம்பிபத்து பால்சாமி என்பவர் தாக்கல் செய்த மனு, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை, பெயர் பலகை ஆகியவை வடக்கு வள்ளியூர் மெயின் ரோடு வள்ளியூர் காய்கறிச் சந்தை பொது நுழைவு வாயில் அருகே நிறுவப்படவுள்ளது என்றும் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது. அதன் தொடர்பில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது.

சந்தை அருகே சிலையை எழுப்ப வேண்டாம் என ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது; சிலை அமைப்பது தொடர்பான குறிப்பிட்ட அரசாணை திரும்பப் பெறப்படும் என்று அரசுத் தரப்பு தெரிவித்தது.

அதற்கு நீதிபதிகள், பொது சாலைகள், நடைபாதைகள், பொது பயன்பாட்டுக்குரிய மற்ற இடங்களில் இனி எந்தச் சிலையையும் நிறுவவோ எந்தக் கட்டமைப்பையும் அமைக்கவோ அனுமதிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டதைச் சுட்டியது.

2021ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற அமர்வில், அனைத்துப் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், பொதுச் சாலைகள், அரசு நிலம் உள்ளிட்டவற்றில் உள்ள சிலைகள், கட்டமைப்புகளைத் தமிழக அரசுத் தரப்பு அடையாளம் காண வேண்டும் என்றும் ஆக்கிரமிப்பு அல்லது அனுமதியற்ற சட்டவிரோதக் கட்டமைப்புகள், சிலைகளை விதிமுறைகளுக்கு இணங்க அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டதை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.

சம்பந்தப்பட்ட பொது இடங்களில் மக்களின் உரிமைகளைப் பாதிக்கும் எந்தவொரு கட்டமைப்பையோ சிலையையோ அமைப்பதற்கு இனி அனுமதி வழங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டதையும் உச்ச நீதிமன்றம் சுட்டியது.

குறிப்புச் சொற்கள்