திருவண்ணாமலை: புகழ்பெற்ற இடுக்குப் பிள்ளையார் கோவிலில் உள்ள குகைக்குள் புகுந்து வெளியேறும் பிரார்த்தனையில் ஈடுபட்டபோது பக்தர் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள இடுக்குப் பிள்ளையார் கோவில் மோட்ச துவாரம் எனக் குறிப்பிடப்படுகிறது.
கோவிலில் உள்ள சிறிய குகை போன்ற அமைப்பின் ஒரு பகுதிக்குள் நுழைந்து, மற்றொரு வழியாக வெளிவந்தால் புண்ணியம் எனக் கருதப்படுகிறது.
பக்தர்கள் ஒருக்களித்துப் படுத்தவாறு குகைக்குள் நுழைந்து கைகளை ஊன்றியவாறு நகர்ந்து வெளியே வருவது வழக்கம்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 24) இரவு ஆந்திராவைச் சேர்ந்த 36 வயதான தாசரி மணி குமார் என்பவர் திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்த பின்னர் இடுக்குப் பிள்ளையார் கோவிலுக்கு நள்ளிரவு கடந்து ஒன்றரை மணியளவில் வந்தார்.
பின்னர் இடுக்குப் பிள்ளையார் கோவில் குகைக்குள் நுழைந்து பிரார்த்தனையை நிறைவேற்ற அவர் முடிவு செய்தார். ஆனால், குகைக்குள் நுழைந்த அவரால் எளிதில் வெளியேற முடியவில்லை. குகைக்குள் சிக்கிக்கொண்ட அவருக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அங்கேயே அவர் மயங்கி விழுந்ததையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
பின்னர் மீட்கப்பட்ட அவர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், அவரது உயிர் முன்பே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

