சென்னை: பெண்களைப் போன்று குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்களுக்கும் பாதுகாப்புத் தரக் கோரி முதல்வர் விஜய்க்கு தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் மனு அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான அருள் துமிலன் கூறுகையில், திரைப்பட நடிகர் ரவி மோகன், மனைவி, அவரது குடும்பத்தாரால் குடும்ப வன்முறைக்கு ஆளாகி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குடும்ப வன்முறைக்கு ஆளாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் உடல் ரீதியான வன்முறை மட்டுமன்றி, மன ரீதியான துன்புறுத்தல், பொருளியல் கட்டுப்பாடு, சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துதல், பெற்ற குழந்தையைப் பார்க்கக்கூடத் தடை விதிப்பது போன்ற வழிகளில் ஆண்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனைவி தரப்பால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி உயிரை மாய்த்துக்கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிப்பதாக தமது மனுவில் குறிப்பிட்டுள்ள அருள் துமிலன், கடந்த 2024ஆம் ஆண்டில்கூட தமிழகத்தில் ஏறக்குறைய 10,000 குடும்பத் தலைவர்கள் உயிரை மாய்த்துக்கொண்டதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
“இதில் 38.4 விழுக்காடு மரணச் சம்பவங்களுக்கு குடும்பப் பிரச்சினைகள்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. மற்ற சம்பவங்களுக்கு கடன், உடல் கோளாறுகள், தொழிலில் பின்னடைவுதான் காரணம் எனத் திசைதிருப்பப்படுகிறது.
எனவே குடும்ப வன்முறைக்கு ஆளாகும் ஆண்களுக்குக் கைகொடுக்க ‘ஹெல்ப்லைன்’ தொலைபேசி வசதியை அளிக்க அரசு முன்வர வேண்டும்,” என்று அருள் துமிலன் வலியுறுத்தி உள்ளார்.
மனைவியைப் பிரிந்து வாழும் திரைப்பட நடிகர் ரவிமோகன், தனது மனைவி தரப்பினர் தன் குழந்தைகளைக்கூடப் பார்க்க அனுமதிக்கவில்லை என்று அண்மையில் கண்ணீர் மல்க பேட்டி அளித்திருந்தார்.

