மதுரை சிறைக் கைதிகள் பராமரிப்பில் லாபம் ஈட்டும் பெட்ரோல் நிலையம்

1 mins read
7589a605-595f-4a83-8576-868169fcda39
தற்போது மதுரை மத்திய சிறையில் 1,750க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனைக் கைதிகள் உள்ளனர். - படம்: தினகரன்

மதுரை: மதுரை மத்திய சிறைச்சாலையில் இயங்கி வரும் பெட்ரோல் நிலையம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக லாபம் ஈட்டி வருகிறது.

சென்னை, கோவை, நெல்லையில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் ஏற்கெனவே பெட்ரோல் நிலையங்கள் இயங்கி வந்த நிலையில், மதுரையிலும் கடந்த 2023ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

தற்போது மதுரை மத்திய சிறையில் 1,750க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனைக் கைதிகள் உள்ளனர்.

கைதிகள் தயாரிக்கும் பல்வேறு பொருள்கள் அனைத்தும் சிறைச்சாலை வாசலில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அங்காடி மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், கைதிகளுக்கு கூடுதல் வேலை வாய்ப்புகளை வழங்க முன்னாள் காவல் அதிகாரி அம்ரேஷ் பூஜாரி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.

அந்த வகையில், கைதிகள் நடத்துவதற்காக பெட்ரோல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்றது.

அரசரடி-ஆரப்பாளையம் பிரிவில் இந்தப் புதிய பெட்ரோல் நிலையம் திறக்கப்பட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக லாபத்தில் இயங்கி வருகிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் இந்தப் பெட்ரோல் நிலையத்தை சுழற்சி முறையில் பராமரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் மற்ற இடங்களைவிட கைதிகள் பராமரிக்கும் பெட்ரோல் நிலையத்தில் விற்பனை அதிகமாக உள்ளது. லாபமும் அதிகமாக இருக்கிறது.

பொதுமக்கள் தரும் இந்த ஆதரவால் கைதிகளும் உற்சாகமாகப் பணியாற்றி வருவதாகச் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்