மதுரை: அரசுப் பள்ளிக்குப் பாதை அமைக்க, தனக்குச் சொந்தமான நிலத்தை தானமாக வழங்கிய மருத்துவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழையூர் பகுதியில், 119 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
அண்மையில், இது உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், புதிய இடத்தில் பள்ளிக் கட்டடத்தைக் கட்ட அரசு இடம் தேர்வு செய்தது. ஆனால், பாதுகாப்பாக இல்லை என்று கூறி, அந்த இடத்தை ஊர் மக்கள் நிராகரித்தனர்.
இதையடுத்து, உள்ளூர் தொழிலதிபர் கோபாலகிருஷ்ணன் என்பவர், இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்.
அந்த இடத்தில் புதிய பள்ளிக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எனினும், புதிய கட்டடத்துக்குச் செல்ல, சாலை வசதி இல்லை என்பது ஒரு குறையாக இருந்தது. பள்ளி அருகே சிவகங்கை மாவட்டம் கல்லலை சேர்ந்த மருத்துவர் வைரவனுக்குச் சொந்தமான நிலம் உள்ளது.
அந்த நிலத்தை அவரிடம் கேட்டுப் பெற ஊர் மக்கள் சந்தித்தனர்.
அவரிடம் நிலம் குறித்த கோரிக்கையை விடுத்தபோது, சிறிதும் யோசிக்காமல் கல்விக்காக தனக்குச் சொந்தமான 20 சென்ட் நிலத்தை இலவசமாகத் தர அவர் முன்வந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அந்த இடத்தில் மாணவர்கள் சாலையில் இருந்து பள்ளிவரை செல்ல பாதை அமைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இத்தகவல் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.