நாகை: நாகப்பட்டினம் மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர் தாக்கியதால் தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியும் கொந்தளிப்பும் நிலவுகிறது. மீனவர்களைத் தாக்கியதுடன் பல லட்சம் மதிப்புள்ள மீன்பிடிக் கருவிகளைக் கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
நாகை மாவட்டம், செருதூர் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த 8ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். அப்போது திடீரென வந்த இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் 9 பேர் நடுக்கடலில் மீனவர்களின் படகைத் தடுத்து நிறுத்தி கத்தியைக் காண்பித்து மிரட்டியுள்ளனர்.
பின்னர் மீன்பிடி வலைகள், கருவிகளைப் பறித்துச் சென்றனர். இதேபோல் மற்றொரு சம்பவத்தில் நாகையைச் சேர்ந்த கோபால் என்பவரின் படகில் சென்ற 5 பேர், மகேஸ்வரி என்பரின் படகில் சென்ற 4 மீனவர்கள், சத்தியசீலன் என்பவரின் படகில் சென்ற 4 மீனவர்கள் ஆகியோரும் கடற்கொள்ளையரின் தாக்குதலுக்கு ஆளாகினர்.
அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 800 கிலோ மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள் ஆகியவற்றைக் கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். ஏற்கெனவே பிடித்து வைத்திருந்த மீன்களையும் மீனவர்கள் இழந்துள்ளனர்.
ஒரே நாளில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 18 மீனவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.