தர்மபுரி: தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும் அவர்களை மேலும் கவரும் வகையிலும் செயற்கை நீர்வீழ்ச்சி, கண்ணாடிப் பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். விடுமுறை நாள்களில் இக்கூட்டம் பல மடங்கு அதிகரிக்கும் நிலையில், ஆண்டுக்குச் சராசரியாக 15 லட்சம் பேர் இங்கு வந்து செல்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அருவிகளில் குளிப்பதும் பரிசல் சவாரி செய்வதும் இங்கு முக்கியமான பொழுதுபோக்கு அம்சங்களாக உள்ளன.
பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், கூடுதல் பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, ஒகேனக்கல்லில் ரூ.17 கோடியே 57 லட்சம் மதிப்பிலான சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, வயது முதிர்ந்தவர்களும் எளிதாகப் பார்த்து ரசிக்கும் வகையில் செயற்கை நீர்வீழ்ச்சி ஒன்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலத்தைப் பார்க்க ஏராளமானோர் நாள்தோறும் வருகின்றனர்.
அதேபோல், அருவிகள் அமைந்துள்ள பகுதிக்கு அருகே இயற்கை எழிலை முழுமையாக ரசிக்கவும் அருவிகளிலிருந்து விழும் நீர்த் திவலைகளைக் கண்டு சாகச அனுபவம் பெறவும் கண்ணாடிப் பாலம் அமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களின் சாத்தியக்கூறுகள் குறித்துச் சுற்றுலாத்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை இணைந்து ஆய்வு நடத்தி வருகின்றன. பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக உறுதிசெய்யப்பட்ட பிறகே, உரிய பரிந்துரைகளின் அடிப்படையில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
