சென்னை மாநகரை உலகத்தரத்துக்கு உயர்த்த திட்டம்: விஜய் உத்தரவு

சென்னை மாநகரை உலகத்தரத்துக்கு உயர்த்த திட்டம்: விஜய் உத்தரவு

கோப்புப் படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

14 Jun 2026 - 3:55 pm

2 mins read

சென்னை: சென்னை மாநகரை உலகத்தரத்துக்கு உயர்த்த, சிறப்புச் சீரமைப்புச் செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

கூவம், அடையாறு ஆறுகளில் நன்னீர் செல்லும் வகையில் அத்திட்டம் அமைய வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

கூவம், அடையாறு ஆறுகள் சென்னை மாநகரின் அடையாளங்களாகக் கருதப்படும் வேளையில், இரு ஆறுகளையும் தூய்மைப்படுத்த, கடந்த காலங்களில் அரசாங்கத் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக அப்போதைய அரசுகள் பல கோடி ரூபாய் செலவிட்டன. குறிப்பாக, கூவம் ஆற்றைத் தூய்மைப்படுத்த ரூ.604 கோடிக்கு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

கூவம் ஆற்றின் ஓரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அங்கு வசித்தோர்க்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டன. குடிசைகள் இருந்த இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

ஆனால், அதன் பிறகும் கூவம் ஆற்றில் விதிகளை மீறி கழிவுநீர் கலப்பதைத் தடுக்க முடியவில்லை. மேலும், நீர்நிலைகளில் குப்பை போடுவதையும் மாநகராட்சியால் தடுக்க முடியாத நிலையில், இன்றளவும் கூவம் ஆற்றில் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதேபோல், அடையாறு ஆறு சீரமைப்புத் திட்டத்துக்கு ரூ.17,000 கோடி ஒதுக்கப்பட்டு, திட்ட அறிக்கை தயாரானது. ஆனால், அந்த நடவடிக்கை தொடங்கிய வேகத்தில் நிறுத்தப்பட்டது.

இத்தகைய சூழலில் அண்மையில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகத்துறை ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய், சென்னை மாநகரை அனைத்துலகத் தரத்திற்கு உயர்த்தவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்கான திட்டத்தை உடனடியாகத் தயாரித்துச் செயல்படுத்த அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தலைமையில் சிறப்புக்குழு அமைத்து கூவம், அடையாறு ஆற்றில் நன்னீர் செல்லும் வகையில் சீரமைப்பதற்கேற்ப செயல்திட்டத்தை உருவாக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார் என்றும் திட்ட அறிக்கையை ஓரிரு மாதங்களுக்குள் அளிக்கவேண்டும் என்றும் அவர் கூறியதாகத் தெரிவித்தது ஓர் ஊடகச் செய்தி.

குறிப்புச் சொற்கள்
ஆறுமுதல்வர்விஜய்திட்டம்நடவடிக்கை