சென்னை: தமிழகத்தில் 16 லட்சம் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ரேசன் பொருள்களை விநியோகம் செய்யும் திட்டம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் சோதனை முயற்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் வருமானம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் ரேசன் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் அரிசி, கோதுமை ஆகியவை இலவசமாகவும் சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை மானிய விலையிலும் ரேசன் கடைகளில் வழங்கப்படுகின்றன. எனினும், இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக ஏராளமானோர் புகார் எழுப்பி வருகின்றனர்.
இதையடுத்து, நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு ரேசன் பொருள் விநியோகத்தில் உள்ள முறைகேட்டைத் தடுக்க, குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் ரேசன் கடைக்கு வந்து, விற்பனை முனையக் கருவியில் கைரேகையைப் பதிவு செய்தால்தான், ரேசன் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
மூத்த குடிமக்கள், நடக்க முடியாதவர்கள் மட்டும் வேறு யாரையேனும் அனுப்பி பொருள்கள் வாங்கலாம். எனினும் இதற்கான நடைமுறை காரணமாக பலருக்குப் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு, ரேசன் ஊழியர்கள் வாயிலாக உணவுப் பொருள்களை விநியோகம் செய்யும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நடப்பு ஜூலை மாதம் 1 முதல் 5ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இத்திட்டம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகை, நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 10 ரேசன் கடைகளில் செயல்படுத்தப்பட்ட இப்புதிய திட்டத்தின்கீழ், ஒவ்வொரு கடையில் இருந்தும் தலா 70 ரேசன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கே வேனில் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன. மூத்த குடிமக்களும் மாற்றுத்திறனாளிகளும் இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
எனவே, ஆகஸ்ட் 15 முதல் முழு அளவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள இத்திட்டத்தின்கீழ் மாநிலம் முழுதும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கிய 16 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் மொத்தம் 21 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

