இதயமற்றவர்கள் வேட்டையாடினால் அரசாங்கத்திடம் முறையிடலாம். அரசாங்கமே வேட்டையாடினால், யாரிடம் முறையிடுவது!
- யானைக் காவலர்களின் வேதனை இதுவாகத்தான் இருக்கிறது.
யானைகள் அதிகம் வாழும் கண்டம் ஆப்பிரிக்கா. இங்குள்ள ஸிம்பாப்வே நாட்டில் ஏறக்குறைய 80 யானைகள் வசிக்க வேண்டிய இடத்தில் சுமார் 2,400 யானைகள் பெருகி வாழ்கின்றன. இதைக் கட்டுப்படுத்த, யானைகளைக் கொல்ல அரசு முடிவெடுத்துள்ளது.
அருகே உள்ள நமீபியா நாடும் யானைகள், விலங்குகளைக் கொல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யானைகளைக் கொல்வதற்கான உரிமத்தை அளிக்க உள்ளதாக ஸிம்பாப்வே வனவிலங்கு மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
உலக அளவில் அதிக யானைகள் உள்ள நாடு போட்ஸ்வானா. அங்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் யானைகள் உள்ளன.
இங்கே உணவுக்காக விவசாய நிலங்களில் யானைகள் புகுவதால் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகிறது.
யானைகளால் மக்களுக்கு உணவுப் பஞ்சம் ஏற்படுவதைத் தடுக்க, யானை வேட்டைக்கு அனுமதி வழங்கியுள்ளது போட்ஸ்வானா அரசு.
இதில் வேடிக்கை என்னவென்றால், இறைச்சிக்காக யானையை வேட்டையாடுவோரின் மூலம் யானைத் தந்தங்களில் அரசுக்கு பெரும் பகுதி கிடைக்கும்.
இந்தத் தந்தங்களை அரசே விற்று, அதில் கிடைக்கும் பணத்தை யானைகள் நலனுக்கு செலவிடுமாம். எனினும், யானைத் தந்தங்களை விற்க அனைத்துலக அளவில் தடை இருப்பதால் அவற்றைப் பொதுச் சந்தையில் விற்க இயலாத நிலை காணப்படுகிறது.
யானைகள் கொல்லப்படுவதற்கு அரசே சட்ட அனுமதி கொடுத்திருப்பது கவலை அளிப்பதாக உலக நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
யானைகள் கொல்லப்படுவதை எல்லை மீறாமல் கண்காணிக்க, ‘மைக்’ (MIKE) எனும் அமைப்பும் செயல்படுகிறது.
MIKE என்றால் Monitoring the Illegal Killing of Elephants (யானைகள் சட்டவிரோதமாக கொல்லப்படுவதைக் கண்காணித்தல்).
இந்த அமைப்பு யானைகள் மேலாண்மை குறித்து தனது தளத்தில் அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
சரி, தமிழகத்தில் யானைகளின் நிலைமை என்ன?
மிகச் சரியாக ஓராண்டுக்கு முன் (2024 மே) நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 3,063 யானைகள் இருப்பதாக அரசு அறிவித்தது.
நீலகிரி மலை (2,553), கோவை வனப்பகுதி (323), ஆனை மலை (310), ஸ்ரீவில்லிப்புத்தூர் வனம் (227), அகஸ்திய மலை (259) ஆகிய எண்ணிக்கையில் யானைகள் வசிக்கின்றன என அரசு புள்ளி விவரம் சொல்கிறது.
கடந்த ஆண்டு 123 யானைகள் இறந்துள்ளன. இதில் வயோதிகம், இயற்கையான முறையில் 107 யானைகளும், இயற்கைக்குப் புறம்பான முறையில் 16 யானைகளும் உயிரிழந்திருக்கின்றன.
விவசாய நிலங்களைப் பாதுகாக்க அமைக்கப்படும் மின்வேலி, வனப்பகுதி வழியே செல்லும் ரயில்கள், காட்டுப்பன்றியைக் கொல்ல விவசாயிகள் வைக்கும் ‘அவுட்காய்’ எனப்படும் நாட்டு வெடிகுண்டுகளை யானைகள் கடிப்பது, தந்த வேட்டை ஆகியவற்றால் இயற்கைக்குப் புறம்பாக யானைகள் மரணம் நிகழ்கிறது.
தமிழக அரசின் பல்வேறு நிதி ஆதார நடவடிக்கையால் ரயில் மோதி யானைகள் இறப்பது குறைந்துள்ளது.
யானை இறப்பைத் தடுக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை இந்திய அரசும், அதன் மாநில அரசுகளும் பயன்படுத்துவது பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது.
யானைகள் குட்டிகளை ஈன்றெடுப்பது ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான். இனப்பெருக்கத்துக்கு முக்கியமாக விளங்கும் ஆண் யானைகளே இயற்கைக்கு விரோதமாக அதிக அளவில் இறப்பதால், கொல்லப்படுவதால் யானைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உயர்கிறது.
காலங்காலமாக யானைகள் பயன்படுத்தி வரும் பாதைகளை மறித்து கட்டடங்கள், ஆசிரமங்கள், விவசாய நிலங்கள், தேநீர் மற்றும் காப்பித் தோட்டங்கள் அமைக்கப்படுவதுதான் அவை மனிதர்களுடன் மோத முக்கியக் காரணியாக உள்ளது.
இதைத் தவிர்க்க யானைப் பாதைகளில் உயர்மட்ட பாலங்களை அமைக்க வேண்டும் எனக் குரல் கொடுத்து வருகிறது ஓசை எனும் அமைப்பு.
இது ஒருபுறமிருக்க, தமிழக வனத்துறை புதிதாக 42 யானைப் பாதைகளை உருவாக்க மக்களிடம் கருத்து கேட்கிறது.
அவரவர் வழியில் அவரவர் நடந்தால் யாருக்கும் துன்பமில்லை.
செயற்கை யானை
யானைகள் எண்ணிக்கை குறைவதாலும், இதனால் யானை வாடகை அதிகரித்திருப்பதாலும் விழாக்களில் தலையை மட்டும் ஆட்டும் செயற்கை யானைகள் (பெரிய யானை பொம்மை) பயன்படுத்தும் போக்கும் மெல்ல அதிகரித்து வருகிறது.
அதிர்ச்சியூட்டும் தகவல்
2010ஆம் ஆண்டு முதல் 2024 வரை 1,738 யானைகள் தமிழகத்தில் இறந்துள்ளன. இதில் இயற்கைக்குப் புறம்பான இறப்பு, முக்கியமாக வேட்டையாடுதலால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 188.
நடிகர் மீது தந்தம் வழக்கு
யானைத் தந்தங்கள், மான் கொம்புத் தலைகள், புலித்தலைகள் ஆகியவற்றை (வேட்டையாடி) பதப்படுத்தி வீடுகளில் அலங்காரப் பொருள்களாக வைத்திருப்பது அந்தக் கால ஜமீன்தார்கள், நில பிரபுக்களுக்கு கௌரவமாக இருந்தது. காலப்போக்கில் வனச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டதால் அவற்றைப் பகிரங்கமாக யாரும் வீடுகளில் மாட்டுவதில்லை.
2012ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் சோதனைக்குச் சென்றபோது, அவர் வீட்டில் இரண்டு யானைத் தந்தங்கள் இருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தந்தனர்.
அவர்கள் விசாரணை நடத்தி, கேரள பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
“இது இயற்கையாக இறந்த யானைகளின் தந்தம். வேட்டைத் தந்தம் அல்ல. இந்த தந்தங்களை வீட்டில் வைத்துக்கொள்ள முறைப்படி அனுமதிச் சான்று பெற்றிருக்கிறேன்,” என மோகன்லால் தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கைத் தள்ளுபடி செய்யவும் கேட்கப்பட்டது.
ஆனால், மோகன்லாலின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், வழக்கின் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.
வழக்கு விசாரணை நீடிக்கிறது.
யானைகளுக்கு ஏற்படும் பெரும் பசி
யானைகள் அதிகமாக உணவு உண்பதற்குக் காரணம், யானையை இயற்கை அப்படிப் படைத்துள்ளது.
புல், தழைகள், இலைகள், மரப்பட்டைகள், இளமரங்கள், மூங்கில்கள், கரும்புகள் எனத் தாவர உணவுகளை யானைகள் தங்கள் வயதிற்கேற்ப 150 முதல் 300 கிலோ வரை உண்கிறது. அத்துடன், சுமார் 170 லிட்டர் நீரையும் அருந்துகிறது. இது ஒரு யானையின் ஒரு நாள் உணவு.
யானைகள் உண்பதில் ஏறக்குறைய 40% மட்டுமே செரிமானம் ஆகும். மீதி உணவுகள் லத்தியாக (சாணமாக) வெளியேறும். இதனால்தான் ஒரு நாளில் சுமார் 15 மணிநேரம் உணவைத் தேடியே அவை அலைகின்றன.
யானைகளால் சுற்றுலா வருமானம் ஈட்டும் அரசுகள், யானைகளுக்கான தீனியையும் தயார் செய்து தரவேண்டும் என சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.