தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏடிஎம்மில் கறுப்பு அட்டையைச் செருகி நூதன முறையில் கொள்ளை

1 mins read
f7650a78-71cb-4cd7-b2ea-0b178e883e09
இயந்திரத்திற்குள் கறுப்பு அட்டையை செருகி கொள்ளையடித்த கொள்ளையர்கள். - படம்: ஊடகம்

சென்னை: சென்னை, திருவான்மியூரில் அமைந்துள்ள ஏடிஎம் ஒன்றில் நூதன முறையில் பணத்தைத் திருடிய வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பலைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வெளியே வரும் பகுதியில், வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர், கறுப்பு நிற அட்டையை செருகி வைத்துள்ளனர்.

இதனால், வாடிக்கையாளர்கள் அட்டையைச் செலுத்தி பணம் எடுக்கும்போது பணம் வெளியே வராமல் இருந்துள்ளது. பணம் எடுக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அவர்கள் சென்ற பிறகு கொள்ளையர்கள் இயந்திரத்தில் செருகி வைத்திருந்த கறுப்பு அட்டையை எடுத்துவிட்டு பணத்தை எடுத்துச் சென்றனர். இதுபோல பல ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து பணத்தை இழந்த வாடிக்கையாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்துக்குள் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அலசி ஆராய்ந்தபோதுதான், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட கும்பல் நூதன முறையில் கொள்ளையடிக்க திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு மூன்று பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் நீதிமன்றத்தில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்