சென்னை: பாமகவில் நடைபெற்று வரும் தலைமைத்துவ மோதலின் உச்சமாக அன்புமணி ராமதாஸ் புதுக்கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாள்களாக பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அக்கட்சி பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில், தனிக்கட்சி தொடங்கி, தனித்து இயங்குமாறு அன்புமணிக்கு சில தரப்பினர் ஆலோசனை வழங்கி இருப்பதாகவும் அவர் இதுகுறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பாமக தலைவர் தாமே என்று அன்புமணி கூறுகிறார். ஆனால் தாம் இறக்கும் வரை தாமே கட்சித் தலைவர் என அறிவித்துள்ளார் மருத்துவர் ராமதாஸ். கட்சியின் அடிப்படை விதிகள், அன்புமணி தரப்புக்கே ஆதரவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால், மோதல் போக்கை தொடராமல், ஒதுங்கிச்செல்ல அன்புமணி முடிவெடுத்திருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘அகில இந்திய பாட்டாளி மக்கள் கட்சி’ எனப் பெயர் வைத்து, தனித்து இயங்கலாம் என சிலர் முன்வைத்த யோசனையை அன்புமணி தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.