புதுடெல்லி: பாமக பிரமுகா் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாகத் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கொடைக்கானல் உணவக உரிமையாளா் இதயத்துல்லாவைக் கைது செய்துள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த பாமக பிரமுகரான ராமலிங்கம், 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாதவர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பாத்திரக் கடை நடத்தி வந்த திரு ராமலிங்கம், மதமாற்றம் செய்வதைத் தொடா்ந்து கண்டித்து வந்ததால் ஏற்பட்ட பிரச்சினையால் அவா் படுகொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் 18 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டு 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள ஐவர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனா். தலைமறைவாக உள்ளவர்களில் ஒருவர் ரஹ்மான் சாதிக் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்காசி, திண்டுக்கல் பகுதியில் ஒன்பது இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை (ஆகஸ்ட் 21) சோதனை நடத்தினா்.
கொடைக்கானலில் ஆம்பூர் பிரியாணி உணவகம் நடத்தி வரும் இதயத்துல்லா, உணவகத்தில் கொலை வழக்கில் தொடா்புடைய கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் குற்றவியல் ஆவணங்களும் மின்னிலக்க சாதனங்கள் போன்றவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
எஸ்டிபிஐ கட்சியின் திண்டுக்கல் மாவட்டப் பொருளாளர் ஷேக் அப்துல்லா 40, அவரது மனைவி மற்றும் கொடைக்கானல் பூம்பாறை பகுதியிலுள்ள இருவர் ஆகியோரின் கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா். சென்னை என்ஐஏ அலுவலகத்தில் முன்னிலையாக அவர்களுக்கு அழைப்பாணை கொடுக்கப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள புர்ஹானுதீன், நஃபீல் ஹசன் தடைசெய்யப்பட்ட பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்பின் முன்னாள் நிர்வாகிகள். அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று என்ஐஏ அறிவித்திருந்தது.