விழுப்புரம்: தமிழக முதல்வர் ஸ்டாலினைக் கண்டித்து விழுப்புரத்தில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 70க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினரைக் காவலர்கள் கைது செய்தனர்.
சென்னையில் திங்கட்கிழமை நடந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பின் முதல்வர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வேறு வேலையின்றி இருப்பதால் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அந்த அறிக்கைக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று தெரிவித்திருந்தார்.
மருத்துவர் ராமதாசைஅவ்வாறு பேசியது தவறு எனவும் அதனால் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாகச் சென்றனர்.
காவல்துறையினரின் தடையையும் மீறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைய முயன்ற பாமகவினரை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனாலும் காவலர்களைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைய முயன்றதால் ஆட்சியர் அலுவலக நுழைவாயிற் கதவை காவலர்கள் இழுத்து மூடினர்.
ஆனால், தடையையும் மீறி உள்ளே புகுந்த பாமகவினர், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஸ்டாலினைக் கண்டித்து முழக்கமிட்டனர். அதனால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமக எம்.எல்.ஏ. சிவகுமார் உள்ளிட்ட 73 பேரை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

