சென்னை: பாமக சார்பாக ஆண்டுதோறும் வெளியிடப்படும் நிழல் நிதிநிலை அறிக்கையில் அடுத்த நான்கு ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
பாமக ஆட்சியமைக்கும் பட்சத்தில் அதன் நிழல் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் நிறைவேற்றப்படும் என அக்கட்சித் தலைமை தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் இந்த ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் வெளியிட்டார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
“தமிழ்நாட்டு மக்களுக்கான திட்டங்களை வகுப்பதிலும் நிதிநிலை அறிக்கையைத் தயாரிப்பதிலும் தமிழக அரசுக்கு வழிகாட்டும் என்ற நோக்கத்துடனும் 2003 - 2004ம் ஆண்டு முதல் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக தயாரித்து வெளியிட்டு வருகிறது பாமக.
“இந்த நிதிநிலை அறிக்கையின் படி, கல்வி, மருத்துவம், விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசுக்கு பாமக வலியுறுத்தியுள்ளது. அதன்படி நிழல் பட்ஜெட்டில் கல்வி, மருத்துவத்துக்கு 6% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண்துறைக்கு 65,000 கோடியும் கல்வி, மருத்துவம், விவசாயத்துக்குரிய மொத்த செலவில் மூன்றில் ஒரு பங்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
“மே 1ஆம் தேதி முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்படும். இரு மொழிக் கொள்கை தொடரும். தொகுதிக்கு ஒரு அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும். தமிழகத்தில் 6 புதிய மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும். ரூ.318க்கு சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும். வேலையில்லா இளையர்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும். பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது.
“கோயம்பேடு பேருந்து முனையம் பூங்காவாக மாற்றப்படும். கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்படும். மேகதாது அணை கட்டுவது தடுக்கப்படும். கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்கப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகள் நிழல் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.


