சென்னை: திமுக ஆட்சியை அகற்றுவதே பாமகவின் முக்கியமான இலக்கு என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் நேற்று (ஆகஸ்ட் 9) நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அன்புமணி, கடந்த சில நாள்களில் மட்டும் தனது தந்தை ராமதாசுடன் 40 முறைக்கும் மேல் பேசியிருப்பதாகவும் அவரை சிலர் குழப்பி வருவதாகவும் குறிப்பிட்டார்.
“கட்சி விவகாரத்தில் நீங்கள் விட்டுக்கொடுக்கலாமே எனப் பலரும் என்னிடம் சொல்கிறார்கள். அவர்கள் இவ்வாறு சொல்வது நல்லதுதான். ஆனால் ஒருமுறை, இரண்டு முறை அல்ல, 40 முறைக்கும் மேலாக அவரிடம் பேசிவிட்டேன்,” என்றார் அன்புமணி.
ஒருசிலரது பேச்சைக் கேட்டு ராமதாஸ் தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், மிக விரைவில் நல்ல கூட்டணி அமைத்து பாமக ஆட்சிக்கு வரும் என்றார்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை பாமக ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டதாகவும் இதை வீதிவீதியாகச் சென்று மக்களிடையே கூறி வருவதாகவும் அன்புமணி தெரிவித்தார்.
ராமதாசுக்காக பொதுக்குழு மேடையில் ஓர் இருக்கை போடப்பட்டிருந்தது. எதிர்காலத்தில் அவர் வருத்தம் மறைந்து நிச்சயம் தங்களுடன் இணைவார் என்றும் அப்போது பொதுக்குழுவில் உள்ள இருக்கையில் ராமதாஸ் அமர்வார் என்றும் அன்புமணி கூறினார்.
முன்னதாக, இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தந்தை, மகன் இடையே சமரசத்தை ஏற்படுத்தும் வகையில் இருவரையும் உயர் நீதிமன்றத்துக்கு நேரில் வரவழைத்து, தனித்தனியே சந்தித்துப் பேச விரும்புவதாக வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், மருத்துவர் ராமதாஸ் உடல்நலத்தை முன்வைத்து நீதிமன்றத்துக்கு வரவில்லை.
இந்நிலையில், அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது ராமதாஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.