சென்னை: தமிழகம் முழுவதும் இணையம் வழி பாலியல் காணொளிகள், புகைப்படங்களைப் பார்த்த, பதிவிறக்கம் செய்த 13,000 பேருக்குக் காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக தமிழகத்தில் பரவலாகப் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் ஓர் அங்கமாக இணையத்தில் பாலியல் காணொளிகளைப் பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது, அதை மற்றவர்களுடன் பகிர்வது ஆகிய செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவர காவல்துறை முடிவுசெய்தது.
அந்த வகையில் கடந்த சில நாள்களாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் கிட்டத்தட்ட 13,000 பேர் அடையாளம் காணப்பட்டதாக இணையக் குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலியல் வன்கொடுமை, பெண்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட, 43,000 பேர் தீவிர கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பாலியல் படங்கள், காணொளிகளைப் பதிவிறக்கம் செய்த, 13,000 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இதுபோன்ற குற்றங்களுக்கு 10 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.