சென்னை: பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள குற்றவாளிகள் வெளி மாநிலங்களில் தங்கியிருப்பது தெரியவந்தால், அவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் விமானத்தில் செல்லலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு காவல்துறையினர் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் இணைய மோசடி, கொலை, கொள்ளை, நிதிநிறுவன மோசடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் சிலர் வெளிமாநிலங்களுக்குத் தப்பிவிடுகின்றனர்.
மேலும், பலர் வெளிமாநிலங்களில் இருந்தபடியே இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.
வடமாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்கள் சிலர் தமிழகத்துக்கு விமானத்தில் வந்து கொள்ளையடித்துவிட்டுச் சென்றதும் தெரியவந்துள்ளது.
இவர்களைப் பிடிக்கமுடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். வெளி மாநிலங்களுக்குச் சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன.
உயரதிகாரிகளிடம் அனுமதி, கூடுதல் ஆயுதங்கள், செலவுத்தொகை என பலவற்றுக்கு அனுமதி பெற வேண்டும். மேலும், உயரதிகாரிகள் மட்டுமே விமானத்தில் செல்ல முடியும். மற்ற அதிகாரிகளும் காவலர்களும் ரயிலில் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
இதனால் ஒருங்கிணைந்து செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது வெளிமாநிலங்களுக்குச் செல்லும் தனிப்படைகளில் இடம்பெறும் உயரதிகாரிகள் தொடங்கி, கீழ்நிலை காவலர்கள் வரை அனைவரும் விமானத்தில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு.
இதுகுறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக காவல்துறை தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

