சென்னை: பிரபல அரசியல் விமர்சகரும் யூடியூபருமான சவுக்கு சங்கரைத் தமிழக காவல்துறை சனிக்கிழமை (டிசம்பர் 13) கைது செய்துள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரை மிரட்டியதாக சவுக்கு சங்கர் மீதும் அவரது குழுவினர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக சனிக்கிழமை காலை காவல்துறையினர் அவரது வீட்டிற்குச் சென்றனர். ஆனால் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை.
இதையடுத்து காவல் அதிகாரிகள், தீயணைப்பு வீரர்களுக்கு அழைப்பு விடுத்தனர். பிறகு தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சவுக்கு சங்கர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
முன்னதாக தன்னையும் தமது யூடியூப் குழுவையும் காவல்துறை கைது செய்ய இருப்பதாக சவுக்கு சங்கர் ஒரு காணொளியை வெளியிட்டார்.
ஏற்கெனவே சங்கர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பின்னர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, தன் மீதான வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரை சென்று தடை உத்தரவு பெற்று பிணையில் வெளிவந்துள்ளார்.
மீண்டும் தனது சவுக்கு மீடியா வலைஒளியை நடத்தி வரும் அவர், திமுக அரசு, அமைச்சர்கள், கட்சிப் பிரமுகர்கள் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து காணொளிகளை வெளியிட்டு வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
அவரது யூடியூப் சேனலுக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. குறுகிய காலத்தில் அதில் ஏறக்குறைய எட்டு லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.
முன்னதாக, ஆதம்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கரின் வீட்டுக்கு அவரது வழக்கறிஞர்கள் வந்தனர். அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்தது. எனினும், எந்தத் தீர்வும் எட்டப்படாத நிலையில் வீட்டுக்கதவை உடைக்க காவல்துறை முடிவு செய்தது.

