கோவை: கோவை மாவட்டத்தில் எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்தக் கல்வி நிறுவனங்களில் கோவை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர்.
இவர்களில் சில மாணவர்கள் கல்லூரியில் உள்ள தங்கும் விடுதியிலும், இன்னும் சிலர் வெளியில் அறை எடுத்து தங்கியும் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கோவையில் படித்து வரும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில், மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள்கள் புழங்கப்படுவதைத் தடுக்கவும், கல்லூரி மாணவர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்கவும், கோவை மாநகர் மற்றும் புறநகர் காவல்துறையினர் அவ்வப்போது மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) அதிகாலை கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சின்ன வேடம்பட்டி, சின்ன மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் அறை எடுத்து தங்கி இருக்கும் விடுதிகள், வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் மூன்று காவல்துறை ஆய்வாளர்கள் தலைமையில் 70க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
அதிகாலை 6 மணிக்கு கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைக்கு வந்த காவல்துறையினர் கதவைத் தட்டி, உள்ளே சென்று அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். மாணவர்கள் வைத்திருந்த சிறிய பைகள், துணிப் பெட்டிகள், அலமாரிகள், கட்டில்கள், குப்பைத்தொட்டிகள் என அனைத்திலும் சோதனை நடத்தினர்.
அறையில் ஏதாவது தடை செய்யப்பட்ட போதைப் பொருள் மற்றும் கஞ்சாவை மறைத்து வைத்துள்ளனரா எனவும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் அறையில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து மாணவர்களிடம் அவர்களின் பெயர், சொந்த ஊர், அவர்கள் படிக்கும் கல்லூரியின் பெயர், பாடப்பிரிவு மற்றும் மோட்டார் சைக்கிள்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்றும் விசாரித்தனர்.
அதிகாலை நேரத்தில் நடந்த இந்தச் சோதனையால் அந்தப் பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.